maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                தவக்காலம் 1ஆம் வாரம் - ஞாயிறு


 

நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18

அந்நாள்களில்

கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்” என்றார்.

ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார்.

அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ‘ஆபிரகாம்! ஆபிரகாம்’ என்று கூப்பிட, அவர் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்” என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார்.

ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, “ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப்போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக்கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 116: 10,15. 16-17. 18-19 (பல்லவி: 9) Mp3

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

10
‘மிகவும் துன்புறுகிறேன்!’ என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.
15
ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. - பல்லவி

 
16
ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.
17
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். - பல்லவி

 
18
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;
19
உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-34

சகோதரர் சகோதரிகளே,

கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வசனம்

மாற் 9: 7

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.”

நற்செய்தி வாசகம்

என் அன்பார்ந்த மைந்தர் இவரே.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-10

அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

பேதுரு இயேசுவைப் பார்த்து, “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட, அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.

அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது அவர், “மானிடமகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ‘இறந்து உயிர்த்தெழுதல்’ என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 

 

I தொடக்க நூல் 22: 1-2, 9-13, 15-18
II உரோமையர் 8: 31-34
III மாற்கு 9: 2-10

“ஆம் ஆண்டவரே!”


நிகழ்வு

ஒரு பங்கில் இளம் அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் திருவழிபாட்டை வழிநடத்துவதிலிருந்து மக்களை ஒருங்கிணைப்பது வரை, யாவற்றையும் மிகச் சிறப்பாக செய்து வந்தார். அவர் செய்துவந்த இப்பணிகளைப் பார்த்துவிட்டுப் பலரும், ‘இந்தச் சிறுவயதில் இவ்வளவு சிறப்பாக எல்லாவற்றையும் செய்து வருகின்றாரே!’ என்று வியந்துபோயினர்.

இதற்கு நடுவில் அந்த அருள்பணியாளரை மிக அருகிலிருந்து கவனித்து வந்த பெரியவர் ஒருவர் அவரிடம், “சுவாமி! எல்லாவற்றையும் நீங்கள் மிகச்சிறப்பாகச் செய்து வருகின்றீர்களே! உங்களுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அருள்பணியாளர் அவரிடம், “ஆம் ஆண்டவரே’ என்று சொல்லிக் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடப்பேன்; அதுதான் எனது வெற்றிக்குக் காரணம்” என்றார் (The Next 500 Stories – Frank Mihalic, SVD)

இந்த நிகழ்வில் வரும் அருள்பணியாளர் தன்னுடைய விருப்பத்தை அல்ல, கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரது விருப்பத்தை நிறைவேற்றி வாழ்ந்தார். அதுதான் அவரது வெற்றிக் காரணமாக இருந்தது. தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவேண்டும், அவரது திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற சிந்தனையை நமக்குத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்த ஆபிரகாம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார்: “கடவுளுக்குக் கீழ்ப்படிவது என்பது, அவரது குரலுக்குச் செவிசாய்ப்பது, அவர் எந்த வழியைச் சுட்டிக்காட்டுகின்றாரோ அந்த வழியில் திறந்த மனத்தோடு நடப்பது.”

திருத்தந்தை பிரான்சிசின் இவ்வார்த்தைகளை இன்றைய இறைவார்த்தையோடு இணைத்துச் சிந்தித்துப் பார்க்கும்பொழுது, அதற்கு முதலில் அப்படியே பொருந்திப் போகிறவர் ஆபிரகாம். ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாம் – சாரா தம்பதிக்கு அவர்களது முதிர்ந்த வயதில் ஒரு குழந்தையைக் கொடுத்தார், அந்தக் குழந்தையைக்கூட அவர் பலியிடுமாறு சொல்கின்றார். ஆண்டவர் ஆபிரகாமிடமிருந்து சொன்னதற்கு அவர் மறுப்பேதும் சொல்லாமல், தன் ஒரே மகனைப் பலியிட முன்வருகின்றார். அப்பொழுதுதான் கடவுள், “நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்கிறார்.

ஆண்டவர் ஆபிரகாமிடம் அவரது ஒரே மகனான ஈசாக்கைப் பலியிடுமாறு சொன்னது, அவருக்கு மிகுந்த வேதனையையும், தாங்கிக்கொள்ள முடியாத துயரையும் நிச்சயம் தந்திருக்கும். ஆனாலும், அவர் ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்த்து வாழவேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்கின்றார். இவ்வாறு ஆபிரகாம் கீழ்ப்படிதலுக்கும் நம்பிக்கைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்த, அவரது திருவுளம் நிறைவேற்றிய இயேசு

இன்றைய முதல் வாசகம், ஆபிரகாம் கடவுளின் குரலுக்கு எப்படிச் செவிகொடுத்து வாழ்ந்தார் என்பதை எடுத்துச் சொல்கின்ற வேளையில், இன்றைய நற்செய்தி வாசகம் தந்தையின் ஒரே மகனான இயேசு எப்படி அவரின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரது திருவுளத்தை நிறைவேற்றினார் என்பதை எடுத்துச் சொல்கின்றது.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வானது இடம்பெறுகின்றது. இதில் பழைய ஏற்பாட்டுச் சட்டப் பிரதிநிதியான மோசேயும், இறைவாக்கினரின் பிரதிநிதியான இறைவாக்கினர் எலியாவும் இடம் பெறுகின்றார்கள். இவர்கள் இருவருமே இறைவாக்கினர் ஒருவரைக் குறித்து முன்னறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது (இச 18: 15-19; மலா 4: 5-6) மேலும் இவர்கள் இருவரும், எருசலேமில் நிறைவேறவிருந்த இயேசுவின் இறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது (லூக் 9: 31)

இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வில் மேகத்தினின்று ஒலிக்கும் குரல் சொல்லும், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்ற வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. ஒருவர் தன் தந்தையின் அன்பார்ந்த மைந்தராக எப்பொழுது ஆக முடியும் எனில், அவர் இயேசு சொல்வது போல், தன் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றபொழுது மட்டுமே! (யோவா 14: 15). இயேசு தன் வாழ்நாள் முழுவதும் தந்தையின் கட்டளை அல்லது அவரது திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்தார் (லூக் 2: 49, 22: 42; யோவா 4: 34). அதனாலேயே அவர் தந்தையின் அன்பு மைந்தர் ஆனார். முன்பு இயேசு திருமுழுக்குப் பெறும்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் (மத் 3: 17) என்ற வார்த்தைகள் ஒலித்தன. இப்பொழுது இயேசு தோற்றமாற்றம் அடைகின்றபொழுது ஒலிக்கின்றன. இயேசு தொடர்ந்து தந்தையின் குரலைக் கேட்டு, அவரது திருவுளத்தை நிறைவேற்றி வந்தாலேயே இத்தகைய வார்த்தைகள் தொடர்ந்து ஒலித்தன என்பதை நாம் நினைவுகூரத் தக்கது நல்லது.

இயேசுவுக்குச் செவிகொடுத்து வாழ அழைப்பு

மேகத்திலிருந்து ஒலித்த குரல், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே” என்று சொன்னதோடு நின்றுவிடவில்லை; தொடர்ந்து, “இவருக்குச் சாவியுங்கள்” என்கின்றது. இக்குரல் ஒலித்தபின்பு, பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூவரும் சுற்று முற்றும் பார்க்கும்பொழுது, அவர்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அப்படியெனில், அவர்கள் மூவரும், இன்று நாமும் இயேசுவின் குரலுக்குச் செவிசாய்த்து வாழ அழைக்கப்படுகின்றோம்.

திருவிவிலியத்தில் ‘செவிசாய்த்தல்’ என்றால் கேட்பது மட்டும் கிடையாது; கேட்டதன்படி நடப்பதும் ஆகும். “இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்” (திபா 95: 7) என்ற இறைவார்த்தை இந்த உண்மையையே நமக்கு உணர்த்துகின்றன. “இவருக்குச் செவிசாயுங்கள்” என்ற தந்தையின் குரல் கேட்டு சீடர்கள் இயேசுவுக்குச் செவிசாய்த்து, அவரது திருவுளத்திற்கேற்ப வாழ்ந்தது போன்று, நாம் ஒவ்வொருவரும் இயேசுவுக்குச் செவிசாய்த்து, அவரது திருவுளத்தை நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும். நமது விருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இறைவனின் திருவுளத்தின்படி நாம் வாழ்கின்றபொழுது நமக்கு இயேசுவுக்கு வந்ததுபோல் துன்பங்களும் போராட்டங்களும் நிச்சயம் வரலாம். அத்தகைய தருணங்களில் நாம் இறுதிவரை மன உறுதியோடு இருக்க வேண்டும் (மத் 24: 13). அதுவே நாம் செய்யவேண்டிய தலையாய செயல். நாம் இறுதிவரை மன உறுதியோடு இருந்து, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரது அன்பு மக்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

‘உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்’ (திபா 119: 35) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் இயேசுவின் கட்டளைகளின் படி... தந்தைக் கடவுளின் திருவுளத்தின்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter