maraikal
MUM
"
சிலுவைப்பாதை

விண்ணகத் தந்தாய், கல்வாரியை நோக்கிப் பயணம் செய்த உம் திருமகனுடன் நான் இப்பயணத்தைத் தொடங்குகிறேன். என் மீது உமக்குள்ள அன்பையும் அக்கறையையும் நான் காணச் செய்வீராக.
என் மீது உமக்குள்ள அன்பின் மாபெரும் அத்தாட்சி இயேசுவின் சாவே ,உமது திருச்சித்தத்தை நிறைவேற்ற இயேசு எத்தனை சங்கடப்பட்டார் என்று நான் காணச் செய்வீராக. எனக்காக உயிர்விட இயேசுவைத் தூண்டிய அன்பில் எனக்கும் ஒரு சிறிது தருவீராக .உம திருமகனை வாழ்வில் நீர் வழிநடத்தி உத்தானத்தின் மகிமைக்கு அழைத்துச் சென்றது போல் உம் மகனின் அடிச் சுவடுகளில் நடக்கும் என்னையும் நடத்துவீராக .


1 ஆம் ஸ்தலம்

இயேசுவைப் பிலாத்து சாவுக்குத் தீர்ப்பிடுகிறான்

இயேசுவே, கெட்ட மனிதர்கள் உமக்கு அநியாயமாகத் தீர்ப்புக் கூறினார்கள் .ஏனெனில் நீர் செய்த நன்மைகளைக் கண்டு அவர்கள் பொறாமை கொண்டார்கள். இந்தத் தீர்ப்பு உமக்கு மிகுந்த வேதனை அளித்தது. எனக்கும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனது சொற்களைக் கேட்க யாரும் விரும்பவில்லை. 

செபம் : இயேசுவே, நீர் நல்லவர் உம் விரோதிகள் நீர் நல்லவர் என்று ஏற்றுக் கொள்ள மறுத்தனர் .நான் சொல்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாதபோது நான் மடியாதிருக்கத் தேவையான வலிமையைத் தருவீராக. ஆமென் .

2 ஆம் ஸ்தலம்

இயேசு சிலுவையை ஏற்றுக் கொள்கிறார்

இயேசுவே அகில உலகின் பாவங்களையும் நீர் சுமக்க வேண்டியிருந்தது. நான் சுமக்க வேண்டியிருக்கும், பாரச்சுமைகளைப் பற்றி நான் முறையிடுவது போல் நீர் முறையிடவில்லை. அவர்கள்மீது நான் காட்ட வேண்டிய அன்பைச் சுடு சொற்களால் பாழாக்குகிறேன். நீரோ உமக்கு எங்கள் மீதுள்ள அன்பை அன்புடன் எண்பிக்கின்றீர்.

செபம்: நான் அயலாருக்கு அன்புடன் சேவை செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் நான் முறுமுறுக்காதிருக்க உதவி செய்வீராக. உமது சிலுவையைச் சுமப்பதை நான் வாழ்வின் மகிழ்ச்சியாகக் கருத்துவேனாக. ஆமென்.

3 ஆம் ஸ்தலம்

இயேசு சிலுவையின் கீழே விழுகிறார்

இயேசுவே நீர் எங்களைப் போல் மனிதனே. எனவே உமது பலத்துக்கும் எல்லை உண்டு. இரவு முழுவதும் நீர் உறங்கவில்லை. உம்மை வதைத்தார்கள்.  நீர் சினங்கொள்ளவில்லை.  உதவியுடன் நீர் எழுந்து வழிநடந்தீர். நானோ விழும் பொழுது அல்லது ஒரு தப்புச் செய்யும்போது கோபிக்கிறேன்.

செபம் : இயேசுவே, நான் தவறு செய்யும் பொழுது என்னைக் குணமாக்குவீராக. நான் பாவத்தில் விழுந்தால் எழுந்து உம்மிடம் மன்னிப்புக் கேட்டு வழிநடக்க உதவி செய்வீராக. ஆமென்.

4 ஆம் ஸ்தலம்

இயேசு தம் அன்னையைச் சந்திக்கிறார்

இயேசுவே நீர் படும் வேதனைகளை உம் அன்னை கண்டபொழுது நீர் மிகுந்த துயரப்பட்டீர். அவளது துயரத்தை உம்மால் தணிக்க முடியவில்லை. இது அடிக்கடி நேரிடுகிறது. பிள்ளைகள் வீட்டையும் பெற்றோரையும் விட்டுப் பிரிகையில் பெற்றோர் மிக வருந்துகின்றனர்.

செபம்: இயேசுவே, எனக்கு இந்த நிலை ஏற்படும் பொது சரியானதைச் சொல்ல, செய்ய எனக்கு உதவி செய்வீராக. நீர் சங்கடப்படுவதைக் கண்ட அன்னை துயரப்படுகையில் நீர் உம் அன்னை மீது கொண்டிருந்த அன்பை எனக்கும் தருவீராக. ஆமென்.

5 ஆம் ஸ்தலம்

இயேசு சிலுவை சுமக்க சீமோன் உதவுகிறான்


இயேசுவே, உமக்கு உதவி தேவைப்பட்டது. உமது சீடரில் ஒருவரோ நண்பனோ உதவி செய்ய வரவில்லை. அந்நியன் உமக்கு உதவி செய்கிறான். சீமோன் நல்ல மனதுடன் உதவி செய்தானா ? எனினும் அவனது உதவியைத் தாழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டீர்.

செபம்: இயேசுவே, வாழ்வில் எனக்கு உதவி செய்ய நீர் பலரை அனுப்புகிறீர். இதற்காக நான் உமக்கு நன்றி சொல்வேனாக. அவர்கள் எனக்கு உதவியாயிருந்தாலும் உபத்திரவமாயிருந்தாலும் நான் உமக்கு நன்றி சொல்வேனாக. ஆமென்.

6 ஆம் ஸ்தலம்


இயேசுவின் முகத்தை ஒரு பெண் துடைக்கிறாள்

இயேசுவே, உமது கல்வாரிப் பயணத்தில் முதலில் உமது தாய் உதவியாயிருந்தாள். இரண்டாவது, சீமோன், மூன்றாவது இந்தப் பெண், இந்தப் பெண் ஒரு துணியுடன் வருகிறாள். அவளது சேவையை நீர் அன்புடன் ஏற்றுக் கொண்டீர்.

செபம்: இயேசுவே, பிறர் எனக்கு உதவி செய்ய வருகையில் நான் அதை ஏற்றுக்கொள்ளத் துணை புரிவீராக. அவர்களது உதவி எனக்கு அதிக உதவி செய்யாவிட்டாலும் நான் நன்றியுள்ளவனாக இருக்கத் துணை புரிவீராக. ஆமென்.

7 ஆம் ஸ்தலம்

இயேசு திரும்பவும் கீழே விழுகிறார்

இயேசுவே, நீர் திரும்பவும் விழுந்துகிடக்கிறீர். நீர் முறையிடவில்லை. பகைவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நீர் கவலைப்படவில்லை. நானோ தவறு செய்யும்பொழுது பிறர் என்ன நினைப்பார்கள் என மிஞ்சிய கவலைப்படுகிறேன்.

செபம்: நீர் தரையில் விழுந்தபொழுது அப்படியே கிடக்கவில்லை. பலத்தையெல்லாம் திரட்டி எழும்புகிறீர். அதே மன வலிமையை எனக்குத் தாரும். நான் விழுவதைக் கண்டவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நான் அதிகக் கவலைப்படலாகாது.  எழுந்து நடப்பதற்கான மனத்திடனை எனக்கு எப்பொழுதும் தாரும். ஆமென்


8 ஆம் ஸ்தலம்

இயேசுவைப் பெண்கள் சந்திக்கிறார்கள்

இயேசுவே, திரும்பவும் அந்நியர் உம்மைத் தேற்ற வருகிறார்கள். என் சகோதரர்களும் நண்பர்களும் எங்கே என்று நீர் நினைத்திருக்கலாம். அந்நியர்களை நீர் ஏற்றுக் கொண்டீர். இயேசுவே, நீர் அவர்களிடம் அன்பாக இருந்தீர். இயேசுவே உமக்கு சிரமமாயிருந்தாலும் அவர்களுடன் பேசினீர்.

செபம்: இயேசுவே, தம் அன்பைக் காண்பிக்காதவர்கள் என்னை மன நோகச் செய்தபோதிலும் நான் அன்போடு உதவி செய்வேனாக. என்னுடைய உண்மையான நண்பர்கள் என்னைக் கைவிட்டதாக நான் உணர்ந்தபோதிலும் நான் அவர்களுக்கு உதவி செய்வேனாக. ஆமென்


9 ஆம் ஸ்தலம்

இயேசு மூன்றாம் முறை விழுகிறார்

இயேசுவே, கல்வாரியின் பாதையில் நீர் பலமுறை விழுந்திருப்பீர். எனினும் இதுபோதுமென நீர் ஒருபோதும் சொல்லவில்லை. நானோ இதுபோதுமெனக் கருதுகிறேன். இயேசுவே, நீர் என் அருகில் நின்று என்னைத் தேற்றுவீராக.

செபம்: இயேசுவே, நான் மனம்மடிய விட்டுவிடாதேயும். உமது தைரியத்தையும் பலத்தையும் பற்றி பிடித்துக் கொள்வேனாக. இவ்விதம் நான் புதுப்பலம் பெறுவேனாக. ஆமென்


10 ஆம் ஸ்தலம்
இயேசுவின் உடைகளைக் கழற்றுகிறார்கள்

இயேசுவே, இத்தகைய அவமானம் இதுவரை எனக்கு நேரிடவில்லை. ஆனால் எனது கீர்த்தியைப் பறித்திருக்கிறார்கள். மக்கள் எனது குறைகளை மாத்திரம் கவனிக்கின்றனர். என்னைப் பற்றி குறைகூறி என்னை நிர்வாணி போல் ஆக்குகிறார்கள். நான் அவர்கள் முன் ஆடையற்றவனாகிறேன்.

செபம்: இயேசுவே, பிறர் என்னைக் குறைத்துப் பேசும்பொழுது நான் அதைப்பற்றி நினையாதிருக்கும் வரம் தாரும். நான் எனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கான தைரியத்தை எனக்குத் தாரும். என்மீது உமக்குள்ள அன்பை நான் நினைப்பேன். நான் வெட்கி நாண வேண்டுமென்று பிறர் உறுதி செய்து என்னைத் துன்புறுத்தும் போது என்மீது உமக்குள்ள அன்பை நான் நினைப்பேனாக.

11 ஆம் ஸ்தலம்

இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்


இயேசுவே, மூன்று ஆண்டுகளாக நீர் எங்கும் நன்மை செய்துகொண்டு சென்றீர் . இப்பொழுது உம்மைச் சிலுவையில் அறைந்து அதற்கு முடிவு கட்டிவிட்டார்கள் .

செபம் : இயேசுவே, என் பலத்தை நான் அறிய உதவி செய்யும். என்னை ஒன்றும் செய்ய இயலாதவனாக்குவார்களானால் ..... நான் யார் ? நீர் எதற்காக என்னை உண்டாக்கினீர் என்பதை அறிவதற்கான பலத்தை எனக்குத் தாரும். ஆமென்

12 ஆம் ஸ்தலம்

இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார்


இயேசுவே, உமது உயிரை உம் பரலோகத் தந்தையிடம் கையளித்து அமைதியாக இறந்தீர். நானோ சாவுக்கு அஞ்சுகிறேன். எனது வாழ்வின் இறுதியில் வரும் சாவை நினைத்தல்ல, ஆனால் ஓவ்வொரு நாளும் நான் அனுபவிக்கும் சிலுவைகளை நினைத்து அஞ்சுகிறேன். எனது வேலை போய்விட்டால் அல்லது ஒரு நண்பன் என்னைவிட்டு அகன்றால் நான் கைவிடப்பட்டதாக உணருகிறேன், அஞ்சுகிறேன்.

செபம்: இயேசுவே, நான் பரலோகத் தந்தையிடம் நம்பிக்கை வைக்கலாம் என்பதைக் கண்டு பிடிக்கச் செய்யும். அவர் என்னைக் கைவிடமாட்டார். அவர் சாவுக்குப் பின் உமக்கு வாழ்வு அளித்தது போல் உமது உயிர்த்த வாழ்வில் எனக்குப் பங்கு அளிப்பீராக. ஆமென்


13 ஆம் ஸ்தலம்

இயேசுவின் உடலைச் சிலுவையினின்று இறக்குகிறார்கள்


இயேசுவே, நீர் இறந்துபோனீர். நீர் என்ன நன்மை செய்தீர் எனப் பலர் வினவலாம். நீர் சொன்னது போல் சீடர்கள் செய்வார்களா? நீடிக்கும் நன்மை ஏதாவது நீர் செய்தீரா? நான் சாகும் பொழுது நீடிக்கும் நன்மை ஏதாவது எனக்குப்பின் விட்டுச் செல்வேனா? எனது சொற்களும் செயல்களும் நன்மை செய்திருக்கின்றனவா? இதைப் பற்றி நான் ஒன்றும் திண்ணமாக சொல்ல முடியாது. எனது செயலும் சொல்லும் நீடித்த நன்மை செய்ய இறைவன் கிருபை செய்வாராக.

செபம்: இயேசுவே, நான் சாகும்பொழுது அயலார் மீது எனக்கு எத்தகைய அன்பு இருந்தது என்று அறியச் செய்யும். அந்த அன்பின் விளைவுகளை நான் பார்க்க முடியாது. எனினும் நான் அமைதியாகச் சாகலாம்.


14 ஆம் ஸ்தலம்

இயேசு கல்லறையில் வைக்கப்படுகிறார்

இயேசுவே, உம் வனாகத் தந்தையின் வல்லமை மூன்றாம் நாள் உம்மை எழுப்பும்வரை நீர் காத்திருக்க வேண்டும். காத்திருக்கிறவர்களுக்குப் பலம் வாய்ந்த நம்பிக்கை தேவை.

செபம்: இயேசுவே, நான் இறந்து போவேன். உம தந்தை என்னை எழுப்பி விடும் வரை நான் காத்திருக்க வேண்டும். அப்பொழுது நீர் என்னுடன் இருப்பீராக. நான் உதவியற்ற நிலையில் இருக்கையில் நீர் அங்கு என்னுடன் இருந்து நான் நம்பிக்கையுடன் இருக்கச் செய்வீராக.


பொறுத்தருளும் கர்த்தாவே, உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும். என்றன்றைக்கும் எங்கள் பேரில் கோபமாய் இராதேயும் சுவாமி.
[ மும்முறை பாடவும் ]

 

 
Free Blog Widget
Stats Counter
hit counter